டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை - ரோஹித் சர்மா!
நடப்பாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு அணிகளும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு முன் தனது கடைசி டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கைப்பற்றியதன் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 14 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்பட்டுள்ளார்கள். கேப்டனாகவும் ரோஹித் சர்மா அசத்தி இருக்கிறார்.
உலகக்கோப்பை தோல்விக்கு பின், டி20 உலகக்கோப்பை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட மாட்டார்கள் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் தொடரின் வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா பேசுகையில், “என்னை பொறுத்தவரை 50 ஓவர் உலகக்கோப்பை தோல்வி தான் மிகப்பெரிய ஏமாற்றம். ஏனென்றால் நான் ஒருநாள் போட்டிகளை பார்த்து தான் வளர்ந்துருக்கிறேன்.
ஆனால் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, இன்னொரு பெரிய கோப்பைக்கான தொடர் ஜூன் மாதம் நடக்கவுள்ளது. இம்முறை மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல முயற்சிப்போம். கடந்த 2 ஆண்டுகளாகவே ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களை பயிற்சி செய்து வருகிறேன். இந்த ஆட்டத்தில் பந்து கொஞ்சம் ஸ்பின்னாவதை அறிந்த பின், அந்த ஷாட்களை விளையாடினேன். டி20 கிரிக்கெட்டில் எப்போதும் வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும்.
டி20 உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை 15 பேர் கொண்ட இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை. 8 முதல் 10 வீரர்கள் தான் எங்களின் திட்டத்தில் இருக்கிறார்கள். அதனால் சூழலுக்கு ஏற்ப இந்திய அணியின் காம்பினேஷன் முடிவு செய்யப்படும். அதற்கேற்ப வீரர்கள் தேர்வு இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும். அதனை மனதில் வைத்து அணி தேர்வு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.