IND vs AUS: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு; மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஏமாற்றம்!
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோஹித்தும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடர் மற்றும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப காரணங்களுக்காக விளையாடமாட்டார் என்றும், அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் நியூசிலாந்து தொடரில் சொதப்பில் அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷன் கிஷன், ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.