ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ஜோ ரூட், ஹாரி புரூக்!

Updated: Thu, Oct 17 2024 09:43 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்தியது. 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில் கூடுதலாக 33 புள்ளிகளைப் பெற்று தனது இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார். 

அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசி அசத்திய ஹாரி புரூக் 11 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுடன் இணைந்து ஹாரி புரூக் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின் தங்கி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

மேற்கொண்டு இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி 7ஆம் இடத்திலும், ரிஷப் பந்த் 9ஆம் இடத்திற்கும், ரோஹித் சர்மா 13ஆம் இடத்தையும், ஷுப்மன் கில் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பெரிதளில் எந்த மாற்றமும் இன்றி இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். 

மேற்கொண்டு இந்த தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 6ஆம் இடத்தில் தொடர்கிறார். இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் மேட் ஹென்றி, இலங்கையின் அசிதா ஃபெர்னாண்டோ, வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் அகியோர் தலா ஒரு இடங்கள் முன்னேறியுள்ளனர். அதேசமயம் இங்கிலாந்து தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறிய பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி 4 இடங்கள் பின் தங்கி 14ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் நீடிக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்திய அணியின் அக்ஸர் படேல் 7ஆம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் வேறெந்த இந்திய வீரர்களும் டாப் 10 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை