ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 83 ரன்களைச் சேர்த்தார். கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தைக் கொடுத்தனர். இதனால் முதல் 6  ஓவர்களிலேயே அந்த அணி 85  ரன்களைச் சேர்த்தது. அதன்பின் சுனில் நரைன் 47 ரன்களுக்கும், பில் சால்ட் 30 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். 

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் இங்கு வந்ததுமே இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடினோம். அந்த பயிற்சியின் போதே எங்களது வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். மேலும் கடந்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடியதால் இந்த போட்டியின் மீது எங்களக்கு பெரிதளவில் அழுத்தம் எழவில்லை. அதன் காரணமாக இந்த மைதானத்தில் வந்ததுமே பந்துகளை அடிக்க முடிந்தது.

இப்போட்டியில் ஆண்ட்ரே ரஸல் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது.  இந்த மைதானத்தின் சூழ்நிலை சரியாக கனித்து அதற்கேற்றார் போல் அவர் பந்துகளை வீசினார். மேலும் இப்போட்டியில் சுனில் நரைனும் மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அவருக்கு பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அந்த வகையில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார்.

இந்த போட்டியில் எங்களது வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் எளிமையாக இருந்தது. மைதானம் இருவேக தன்மையுடன் இருந்தாலும் பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இந்த நேரத்தில் நான் அதிகம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இது தொடரின் ஆரம்பம் மட்டுமே. இதனால் இனி வரும் போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News