இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இந்திய அணி 1-1 என்று தொடரை சமன் செய்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான மூன்று விதமான அணியிலும் இடம்பிடித்திருந்த அவர், ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும், இதுவரையில் காயம் குணமடையாத நிலையில் நாளை மறுநாள் 11 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இடம் பெறவில்லை.
இந்த டி20 தொடரைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் சரியாகிவிடுவார் என்பதால், மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்வாட் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து முதல் இரண்டு போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.