தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து, 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று டர்பனில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெம்பா பவுமா பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

Advertisement

அதன்பின் 17 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்களை குவித்த டெம்பா பவுமா, சீன் அபேட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டூசெனும் 6 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதன் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ரீஸா ஹென்றிக்ஸ் 3, டெவால்ட் ப்ரீவிஸ் ரன்கள் ஏதுமின்றியும் அதடுத்தடுத்து நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 27 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்ட, அடுத்து களமிறங்கிய ஃபோர்டுயினும் 8 ரன்களுக்கும், ஜெரால்ட் கோட்ஸி 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் லுங்கி இங்கிடி ஒருசில பவுண்டரிகளை அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நாதன் எல்லீஸ், சீன் அபேட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை பறக்கவிட்டார். 

Advertisement

அவருக்கு துணையாக மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட்டும் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ஷார்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தையும், மிட்செல் மார்ஷ் தனது 10ஆவது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். 

அதன்பின் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்திருந்த மேத்யூ ஷார்ட் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் தனது அதிரடியை நிறுத்தாத மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 76 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News