பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகம்து ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சைம் அயூப் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் சைம் அயூப் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களுக்கும், தயாப் தாஹிர் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து சொற்ப் ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணியும் தடுமாறத்தொடங்கியது. ஆனால் ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த இர்ஃபான் கான் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சைம் அயூப் 11 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 98 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரபபில் ஓட்னீல் பார்ட்மேன், தயான் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.