தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.

Advertisement

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ரியான் ரிக்கெல்டன் - கேப்டன் டெம்பா பவுமா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் டெம்பா பவுமா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாமும் 6 ரன்னுடன் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்களை எடுத்த நிலையில் ரிக்கெல்டன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்கோ ஜான்சனும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கைல் வெர்ரைன் 48 ரன்களுடனும், கேசவ் மஹாராஜ் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸை தொடங்கினர். 

இதில் கேசவ் மஹாராஜ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய காகிசோ ரபாடா 23 ரன்களையும், டேன் பீட்டர்சன் 9 ரன்களையும் சேர்த்தனர். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கைல் வெர்ரையன் சதமடித்து அசத்தியதுடன் 105 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்ப்டுத்திய லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்களைச் சேர்த்த நிலையில் திமுத் கருணரத்னே 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய  தினேஷ் சண்டிமாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சண்டிமால் 44 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்காவும் 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைச் சேர்த்தது. இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் 40 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, மஹாராஜ், பீட்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News