தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் குயின்டன் டி காக் 5 ரன்னிலும், பிராண்டன் கிங் 4 ரன்னிலும், மேத்யூ பிரீட்ஸ்கி 6 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.

Advertisement

ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து பவுண்டரிகளை விளாசித் தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிளாசென் மற்றும் வில்லியம்சன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வியான் முல்டரும் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் கேப்டன் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரஸ்ஸி வெண்டர் டூசென் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வெண்டர் டுசென் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டனும் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 63 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய செதிகுல்லா அடலும் 8 ரன்னில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ஜார்ஜ் லிண்டே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவால்ட் பிரீவிஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News