சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடும் சைம் அயூப்; பாக்., ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா மற்றும் கைல் வெர்ரைன் ஆகியோரும் சதங்களை விளாசிய நிலையில், இறுதியில் மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 615 ரன்களைச் சேர்த்து ஆல் ஆவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வாரும் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சைம் அயூம் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்தை தடுக்கும் முயற்சின் போது அவர் தனது காலில் பலத்த காயத்தை சந்தித்தார். அதன்பின் அவர் ஸ்ட்ரெச்சரில் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், அவரது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இப்போட்டியில் இருந்து சைம் அயூப் விலகியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 6 வாரங்கள் தேவைப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சைம் அயூப் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளதால், அது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் அணிக்காக 2024ஆம் ஆண்டில் அறிமுகமான சைம் அயூப் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 364 ரன்களையும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 515 ரன்களையும், 27 டி20 போட்டிகளில் 498 ரன்களையும் சேர்த்துள்ளார். தற்சமயம் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சைம் அயூப் காயத்தால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடுவது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.