விராட் கோலியுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த சாம் கொன்ஸ்டாஸ்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இத்தொடரில் பல சுவாரஷ்யமான சம்பவங்களும் அறங்கேறியது. இதில் மிகமுக்கியமானது ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மீது கொண்டுவந்தது. ஏனெனில் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் நாதன் மெக்ஸ்வீனி இடம்பிடித்திருந்தார்.
ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சோபிக்க தவற நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார். தனது முதல் போட்டியிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ரசிகர்களின் மதிப்பை பெற்றார். ஆனால் அதேசமயம் இதனால் கடுப்பான இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே சாம் கொன்ஸ்டாஸை இடிக்க பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.
இதற்காக விராட் கோலிக்கு ஐசிசி அபராதமும் விதித்தது. அதன்பின் சாம் கொன்ஸ்டாஸ் இந்திய வீரர்களை வம்பிழுப்பதையும், இந்திய வீரர்கள் கொன்ஸ்டாஸை வாம்பிழுப்பதையும் இத்தொடரில் வாடிக்கையாக வைத்திருந்தனர். ஒருபக்கம் இதனால் தொடர் சுவாரஸ்யமாக நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்புடையதல்ல என்ற விமர்சனங்களும் எழத்தொடங்கின. இந்நிலையில் இந்நிகழ்வுகள் குறித்து சாம் கொன்ஸ்டாஸ் மனம் திறந்துள்ளார்.
இந்த தொடர் குறித்து பேசிய கொன்ஸ்டாஸ், “இத்தொடருக்கு பிறகு நான் விராட் கோலியிடம் சிறிது உரையாடினேன். அப்போது நான் அவரிடம் நீங்கள் தான் என்னுடைய முன் மாதிரி என்று, அவருக்கு எதிராக விளையாடுவது எனக்கு கிடைத்த மரியாதை என்றும் கூறினேன். அவர் மிகவும் அன்பானவர் மற்றும் எனக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இலங்கை தொடருக்கு நான் தேர்வு செய்யப்பட்டால் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புவதாக கூறினார்.
எனது முழு குடும்பமும் விராட்டை நேசிக்கிறார்கள். ஏனெனில் சிறுவயது முதலே அவரை என்னுடைய முன்மாதிரியாக கொண்டு தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நான் தொடங்கினேன். அவர் அனைத்து மக்களும் விரும்பக்கூடிய நபராக உள்ளார். மேலும் இந்த விளையாடின் ஜாம்பவான்களில் ஒருவராகவும் அவர் உள்ளார். அவரிடமிருந்து இப்படியான வாழ்த்துகளைப் பெறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket