டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்!

Updated: Thu, Feb 15 2024 11:18 IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்ஃப்ராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு முறையும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சர்ஃப்ராஸ் கான் சதமடிக்கும் போதெல்லாம் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக கேஎல் ராகுல் போட்டியிலிருந்து விலக சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்கிடைத்தது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சர்ஃப்ராஸ் கான் விளையாடும் லெவனில் இடம்பிடிக்காமல், காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக ஃபீல்டிங் மட்டுமே செய்து வந்தார். 

இதையடுத்து அறிவிக்கப்பட்ட எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான் முதன்மை அணிக்காக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அறிமுகமாகியுள்ளார். மேலும் சர்ஃப்ராஸ் கானின் அறிமுகமானதற்கான இந்திய அணியின் தொப்பியை முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே வழங்கினார். 

இந்நிலையில் சர்ஃப்ராஸ் கான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவதை அவரது பெற்றோர் மைதானத்தில் நின்று பார்த்தனர். அப்போது தனது அறிமுக அடையாள தொப்பியுடன் சர்ஃப்ராஸ் கான் தந்தையிடம் செல்ல, தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் சர்ஃப்ராஸ்ன் கானின் தந்தை அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அவரது தொப்பியை கையிலேந்தி  அதற்கு முத்தமிட்டார். இந்நிலையில் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை