T20 WC 2024: முன்ஸி, மெக்முல்லன் அதிரடியில் ஓமனை பந்தாடியது ஸ்காட்லாந்து!

Updated: Mon, Jun 10 2024 10:15 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துஅணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவுசெய்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு நசீம் குஷி - பிரதிக் அத்வலே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் நசீம் குஷி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் அகிப் இலியாஸ் 16 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஸீஷன் மக்சூத், கலித் கைல் இணை ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அத்வலேவுடன் இணைந்த அயான் கானும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பிரதிக் அதவ்லே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரதிக் அத்வலே தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மெஹ்ரான் கான் 13 ரன்களுக்கும், ரஃபிவுல்லா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலுயனுக்கு திரும்பினார். அதேசமயம் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அயான் கான் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. 

ஸ்காட்லாந்து அணி தரப்பில் சஃப்யான் ஷெரீப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேற்கொண்டு மார்க் வாட், பிராட் வீல், கிறிஸ்டோபர் சோல், மற்றும் கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் ஜார்ஜ் முன்ஸி 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் முன்ஸியுடன் இந்த பிராண்ட மெக்முல்லன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார், இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் முன்ஸி 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டனும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் மெக்முல்லன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிராண்டன் மெக்முல்லன் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 61 ரன்களையும், மேத்யூ கிராஸ் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை ஸ்காட்லாந்து அணி ஏறத்தாழ உறுதியும் செய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை