வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் 4 ஓவர்களை விளையாடிய நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் இப்போட்டியானது 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

Advertisement

இதையடுத்து பேட்டிங்கைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடியதன் மூலம், 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து108 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமகா டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 40 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் அலிக் அதானாஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், ஷாய் ஹோப் 42 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 35 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 9.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப் அடித்த கவர் டிரைவ் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் பார்ட்மேன் பந்துவீச்சில் ஷாய் ஹோப் ஒரு அற்புதமான கவர் டிரைவ் ஒன்றை அடித்து பவுண்டரி விளாசினார். இதனைப் பார்க்கும் போது இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் கவர் டிரைவைப் பார்ப்பதுபோல் இருந்தது. இந்நிலையில் ஷாய் ஹோப் அடித்த கவர் டிரைவ் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News