இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும், பதும் நிஷங்கா 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
அதன்படி அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 6 ரன்களுக்கும், அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களுக்கும், விராட் கோலி 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், ரியான் பராக், ஷிவம் தூபே என பேட்டர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 101 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டதன் மூலம் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை 331 சிக்ஸர்களை விளாசி கிறிஸ் கெயில் பெற்றிருந்த நிலையில், அதனை தற்போது ரோஹித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார்.
இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 331 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம்வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 301 போட்டிகளில், 294 இன்னிங்ஸ்களில் 331 சிக்ஸர்களை விளாசியுள்ளார். மேலும் இப்பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் விரர் ஷாஹித் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதல் இடத்த்ல் நீடித்து வருகிறார்.