வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.

Advertisement

இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்தில் தடுமாறினாலும், நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இருவரும் இணைது சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியாக விளையாடியதுடன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பதும் நிஷங்கா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 54 ரன்களில் பதும் நிஷங்கா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்காவும் 9 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸும் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப் மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய பிராண்டன் கிங் 5 ரன்களிலும், எவின் லூயிஸ் 7 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 ரன்களிலும், குடகேஷ் மோட்டி 4 ரன்களிலும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அடுத்து களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர் அகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 60 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - அல்ஸாரி ஜோசப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் 20 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரோவ்மன் பாவெல் தனது விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் 16 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அல்ஸாரி ஜோசபும் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, கேப்டன் சரித் அசலங்கா மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தின. இதன்மூலம் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News