சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இப்போட்டியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 60 ரன்களைச் சேர்க்க மற்றொரு தொடக்க வீர்ரான உஸ்மான் கவாஜா 57 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டிவ் ஸ்மித் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 72 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த கேப்டன் பட் கம்மின்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார். இதில் கம்மின்ஸ் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை ஒரு ரன்னில் தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 34ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் தனது 34ஆவது சதத்தைப் பதிவுசெய்துள்ள ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றி அதிக சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் 7ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் முன்னாள் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், மஹேலா ஜெயவர்தனே, பிரையன் லாரா ஆகியோரது சாதனைகளையும் சமன்செய்து அசத்தியுள்ளார்
இதுதவிர்த்து இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 10 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை முறியடித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் 11 சதங்களை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இதில் விவ் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங், கேரி சோபர்ஸ் ஆகியோர் 8 சதங்களை விளாசி மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 11 சதங்கள் (43 இன்னிங்ஸ்களில்)
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 10 சதங்கள் (55 இன்னிங்ஸ்களில்)
- கேரி சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)- 8 சதங்கள் (30 இன்னிங்ஸ்களில்)
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 8 சதங்கள் (51 இன்னிங்ஸ்களில்)
- விவி ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 8 சதங்கள் (41 இன்னிங்ஸ்களில்)
மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் எனும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். அதன்படி சச்சின் டெண்டுகர், விராட் கோலி ஆகியோர் தலா 9 சதங்களை விளாசியுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக சதங்கள்
- 10 - ஸ்டீவ் ஸ்மித்*
- 9- விராட் கோலி
- 9 - சச்சின் டெண்டுல்கர்
- 8 - ரிக்கி பாண்டிங்
- 7 - மைக்கேல் கிளார்க்