பேட்டிங்கில் நான் எப்போதும் போல் சிறப்பாக செயல்படுகிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னரே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி ஒன்று வெளியானது. அதன்படி, அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் போது முழங்கையில் கயமடைந்ததாகவும், இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ஸ்டீவ் ஸ்மித் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் துபாயில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சி முகாமிலும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த வார இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் தனது பேட்டிங் பயிற்சியை தொடங்குவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முழங்கை காயத்தில் இருந்து மீண்டது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பிக் பேஷ் லீக் தொடரின் சிட்னி தண்டருக்கு எதிரான லீக் போட்டியில் டேவிட் வார்னர் அடித்த பந்தை பவுண்டரிக்கு வெளியே பிடித்து மீண்டும் மைதானத்திற்குள் வீசினேன், பின்னர் அந்த பந்தை மிகவும் கடினமாக வீசினேன். அப்போது எனது முழங்கையில் கடுமையான வலியை உணர்ந்தேன். இது கடந்த 2019 இல் என் தசைநார் உடைந்தபோது எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு அது, அதனால் நான் கொஞ்சம் கவலைப்பட்டேன்.
ஆனால் ஸ்கேன் செய்ததில் அதிர்ஷ்டவசமாக என் தசைநார் இன்னும் அப்படியே உள்ளது. எனக்கு தசையில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் பந்தை த்ரோ அடிப்பதற்கு சற்று சிரமப்பட்டாலும், பேட்டிங்கில் நான் எப்போதும் போல் சிறப்பாக செயல்படுகிறேன். தற்போது எங்கள் அணி வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்திற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அவர்கள் இத்தொடரில் எங்களை நல்ல நிலையில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.