தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சாதனைகளை குவிக்கவுள்ள சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இரண்டாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்களான மிஹ்லலி மபோங்வானா, ஆண்டிலே சிமெலேன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ள நிலையில், காகிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் சதமடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
முன்னதாக ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 5 சதங்களை அடித்து சாதனையை தன்வசம் வைத்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் 4 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் மற்றிம் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இதுதவிர்த்து இந்த டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியாடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் 14 போட்டிகளில் 394 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் சூர்யகுமார் யாதவ் 7 போட்டிகளில் 346 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற அடிப்படையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தற்போது ரோஹித் சர்மா 429 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (2551 ரன்கள்), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (2575 ரன்கள்), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (2584), ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் (2600) போன்ற ஜாம்பவான்களை மிஞ்சும் வாய்ப்பும் சூர்யகுமார் யாதவுக்கு உள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதல் 10 இடங்களுக்குள் நுழைவார். தற்போது, சூர்யகுமார் யாதவ் 74 சர்வதேச டி20 போட்டிகளில் 2544 ரன்களுடன் இந்த பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.