ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் தலிவால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஆரோன் ஜோன்ஸ் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய பர்காத் சிங் 18 ரன்களுக்கும், தில்ப்ரீத் பஜ்வா 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கனடா அணியானது 53 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத்தொடர்ந்து நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஸ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

Advertisement

இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக்கோலஸ் கிர்டன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 49 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய திலன் ஹெய்லிகர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் மொவ்வா 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணியானது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது. அயர்லாந்து அணி தரப்பில் கிரெய்க் யங் மற்றும் பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News