T20 WC 2024, Super 8: டி காக், மில்லர் அதிரடி; இங்கிலாந்து அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 2-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.செயின்ட் லூசியாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் பட்லரின் அபாரமான த்ரோவின் மூலம் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 113 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே மார்கோ ஜான்செனும் விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித், மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.