ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்து வீச்சாளர்- விராட் கோலி புகழாரம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. கிட்டத்திட்ட 17 வருடத்திற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது.
அதன்படி முதலில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை வழங்கினர். அதன்பின் டெல்லியில் இந்திய அணி பிரதமரை சந்தித்த வீரர்கள் அவரிடம் வாழ்த்து பெற்ற பின், டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். மேலும் மும்பையில் இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வெற்றி ஊர்வலமும் நடத்தப்பட்டது.
லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணியும் நடத்தப்பட்டது. இதில் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுடன், அணியின் பயிற்சியாளர்கள், பிசிசிஐ உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேற்கொண்டு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களுக்கான பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடிக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீரர்களிடம் வழங்கினார். இந்நிலையில் இந்த விழாவின் போது பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற மிகமுக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டி பேசினார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
பும்ரா குறித்து பேசிய விராட் கோலி, “ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்துவீச்சாளர். அவர் இந்திய அணிக்காக விளையாடுவது எங்களின் அதிர்ஷ்டம். அவரை நான் பாராட்ட விரும்புகிறேன். ஏனெனில் எப்போதெல்லாம் இந்திய அணி பின் தங்கியதோ, அப்போதெல்லாம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை கம்பேக் கொடுக்க வைத்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலுமே அவர் அதனை செய்து எங்களை எப்போதும் முன்னேக்கி செல்ல வைத்தார். மேலும் அவர் இந்திய நாட்டின் பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல” என்றும் பாராட்டியுள்ளார்.