ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அதன்படி நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியை ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கு முன்னதாக வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து அமெரிக்கா செல்லவுள்ளனர். அதன்படி முன்னதாக மே 21ஆம் தேதி ஒரு குழுவும், ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு மற்றொரு குழுவும் அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் அதில் தற்போது சில மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது. அதன்படி முதல் குழுவானது மே 25ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் மற்றொரு குழு மே 27ஆம் தேதி செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி முதலில் அமெரிக்கா செல்லும் குழுவில் கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங் உள்ளீட்ட வீரர்களுடன் அணியின் பயிற்சியாளர்கள், மற்றும் குழு உறுப்பினர்கள் பயணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடும் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வான வீரர்கள் மே 27ஆம் தேதி பயணிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
ரிஸர்வ் வீரர்கள் - ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்