இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து குயின்டன் டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதன்பின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார். அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்ததுடன் 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலமாக இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் எதோ ஒன்று குறையாகவே இருந்தது. ஆனால் இன்று நாட்டிற்கு எது தேவையோ அதை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
நான் எப்போதும் கடவுளை நம்புவேன். கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னைப் பற்றி கூறப்பட்டு வந்தன. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட அதிகமாக பேசினார்கள். அனைத்துக்கும் அமைதியாகவே இருந்தேன். எனது வாழ்க்கை, ஒரு கட்டத்தில் அவர்களுக்கான பதிலடியாக இருக்கும் என்று நம்பினேன். அது தற்போது நடந்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்காகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களாக இருக்கும் அவர்கள், இந்த வெற்றிக்கும் கொண்டாட்டத்திற்கும் தகுதியானவர்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இருவருடன் தொடர்ந்து பயணித்து விளையாடி வருவது அற்புதமான அனுபவம். நிச்சயம், எதிர்காலத்தில் அவர்கள் இருவரையும் மிஸ் செய்வோம். அதேசமயம் ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு எங்களால் சிறந்த பிரியாவிடையைக் கொடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.