ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் இருவரும் தலா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஹரி டெக்டரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய லோர்கன் டக்கர் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கர்டிஸ் காம்பேர் 10 ரன்களிலும், ஜார்ஜ் டக்ரேல் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோர்கன் டக்கரும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த கரேத் டெலானி மற்றும் மார்க் அதிர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் அதிர் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 49 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 19 ரன்களில் கரேத் டெலானியும் விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் டிம் பிரிங்கிள் 3 விக்கெட்டுகளையும், டேனியல் டோர்ம், பால் வான் மீகெரன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் மைக்கேல் லெவிட் 19 ரன்களுக்கு விக்கெட்ட இழக்க, அடுத்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஓடவுட்டுடன் இணைந்த பாஸ் டி லீடும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓடவுட் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 32 ரன்களில் பாஸ் டி லீடும் ஆட்டமிழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஸ்டாக் எட்வர்ட்ஸ், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், பால் வான் மீகெரன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் கடைசி ஓவரில் நெதர்லாந்து அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், களத்தில் இருந்த டிம் பிரிங்கிள் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசியதுடன் 35 ரன்களைச் சேர்த்தார். 

இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஃபின் ஹேன்ட் 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர், கர்டிஸ் காம்பே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் அயர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News