முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!

Updated: Sat, May 18 2024 22:20 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். அதன்படி இந்த முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய மைக்கேல் லெவிட் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 43 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் ஓடவுட்டும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏங்கல்பிரெட் 8 ரன்களுக்கும், தேஜா நிடமானுரு 19 ரன்களுக்கும், லோகன் வான் பீக் 5 ரன்களிலும், ஆர்யன் தத் 2 ரன்களிலும், பால் வான் மீகெரன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

ஸ்காட்லாந்து அணி தரப்பில் கிறிஸ்டோபர் சோல் மற்றும் கவின் மைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணி களமிறங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை