முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!

Updated: Thu, May 23 2024 12:18 IST
Image Source: Google

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் ஒல்லி ஹைர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஹைர்ஸ் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சார்லி டிர் 9 ரன்களுக்கும், கேப்டன் பெர்ரிங்டன் ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ் முன்ஸி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முன்ஸி 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய மேத்யூ கிராஸ் 14 ரன்களுக்கும், மைக்கேல் லீஸ்க் 9 ரன்களுக்கும், கிறிஸ் கிரீவ்ஸ் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் வாட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விக்ரம்ஜித் சிங், மைக்கேல் லெவிட், சைப்ரன்ட் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் இணைந்த பாஸ் டி லீட் - கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டட்தை வெளிப்படுத்திய பாஸ் டி லீட் 27 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 29 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வெஸ்லி பரேஸி, லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், ஆர்யன் தத் உள்ளிட்ட வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், நெதர்லாந்து அணியானது 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை