கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டிவ் ஸ்மித் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் 72 ரன்களில் லபுஷாக்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றைய தினம் வயது மூப்பு காரணமாக காலமானர். அவருக்கு வயது 92 ஆகும். இவர் கடந்த 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையில் இரு முறை இந்திய நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்துள்ளாா்.
இதனையடுத்து மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இதுதவிர்த்து முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.