ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு!

Updated: Sun, Jun 30 2024 15:33 IST
ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

மேலும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலியும், அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அறிவித்தனர். இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த செய்தியானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து இரு வீரர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவியில், "ரோஹித் ஒரு நம்பிக்கைக்குரிய இளைஞராக இருந்து உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக உங்கள் பரிணாம வளர்ச்சியை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், சிறப்பான திறமையும் தேசத்திற்கு மகத்தான பெருமையை கொண்டு வந்துள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை அபாரமாக வழிநடத்தியதுடன் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளது நீங்கள் அடைந்துள்ள உச்சத்தைக் காட்டுகிறது. இப்போது நீங்கள் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது நல்லது ரோஹித் சர்மா” என்று பதிவுசெய்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதேபதிவில் விராட் கோலி குறித்து பதிவிட்டுள்ள சச்சின், “விராட் கோலி, நீங்கள் இந்த விளையாட்டின் உண்மையான சாம்பியன். இத்தொடரில் உங்களுக்கு கடினமான நேரம் இருந்திருக்கலாம், ஆனால் நேற்று இரவு நீங்கள் ஏன் உண்மையிலேயே ஜென்டில்மேன் விளையாட்டின் சிறந்தவர்களில் ஒருவர் என்பதை நிரூபித்தீர்கள். ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடி கடைசியில் வெற்றி பெற்றது எனக்கு நன்றாகத் தெரிந்த அனுபவம். விளையாட்டின் நீண்ட வடிவங்களில் இந்தியாவுக்காக நீங்கள் தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை