ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பதான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் லீயோ ஃபிரான்ஸிஸ்கோ 2 ரன்னிலும், திலகரத்னே தில்ஷன் 8 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லசித் லக்‌ஷனும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த மெவன் ஃபெர்னாண்டோ - கேப்டன் திசாரா பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

Advertisement

அதிலும் குறிப்பாக சிக்ஸர் மழை பொழிந்த திசாரா பெரேரா 35 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 36 பந்துகளில் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் என 108 ரன்களையும், மறுபக்கம் மெவன் ஃபெர்னாண்டோ 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 81 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை லையன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 230 ரன்களைக் குவித்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் பதான்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் 8 சிக்ஸர்களை விளாசி 70 ரன்களையும், அயான் கான் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களையும், சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த  அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இலங்கை லயன்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கான் பதான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை லயன்ஸ் அணி கேப்டன் திசாரா பெரேரா தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் ரசிகர்களுக்கு விருந்துப்படைத்தார். அதிலும் குறிப்பாக ஆஃப்கான் தரப்பில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை அயான் கான் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட திசாரா பெரேரா அந்த ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசியதுடன், மொத்தமாக 39 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் திசாரா பெரேரா சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News