தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 22அவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கோவை கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சுஜய் மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 29 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சுரேஷ் குமார் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 15 ரன்கள் எடுத்திருந்த சுஜயும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் மற்றும் முகிலேஷ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் முகிலேஷ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷனும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அரவிந்தும் 8 ரன்களுடனும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான் களமிறங்கியது முதலே சிக்ஸர்களை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. ஆனால் மறுமுனையில் விளையாடிய அதீக் உர் ரஹ்மான் 3 ரன்களிலும், முகமது ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.
ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த ஷாருக் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், மிதுன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்தவகையில் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஹரி நிஷாந்த் ரன்கள் ஏதுமின்றியும், சுரேஷ் லோகேஷ்வர் 6 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சதுர்வேத் 10 ரன்களுக்கும், ஜெகதீசன் கௌசிக் 27 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரீ அபிஷேக், உத்திரசாமி சசிதேவ், முருகன் அஸ்வின் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மிதுன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களையும், இதில் கார்த்திக் மனிகண்டன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவ்ரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் மதுரை பாந்தர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. லைகா கோவை கிங்ஸ் அணி தரப்பில் தாமரை கண்ணன் 4 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.