கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 12, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2. ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் சோஃபியா டங்க்லியும் வென்றுள்ளனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு ரன்களைக் குவித்ததுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றதன் காரணமாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.
3. ஐசிசியின் புதுபிக்கப்பட்ட மகளிர் டி20 தரவரிசையில் இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மா பந்துவீச்சாளர்களில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான மைதானங்கள் பட்டியலில் இருந்து பெங்களூரு எம் சின்னசாமி மைதானம் விலக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடகா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் இங்கு நடைபெற வேண்டிய போட்டிகள் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: LIVE Cricket Score
5. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஆகஸ்ட் 19, 20ஆம் தேதிகளில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக சுப்மன் கில் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரிடையே கடும் போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.