ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் தன்ஸித்துடன் இணைந்த கேப்டன் லிட்டன் தாஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் லிட்டன் தாஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசனும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து கையோடு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் அந்த அணி 57 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய ஜக்கர் அலி ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஜக்கர் அலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். இறுதியில் ஹசன் மஹ்மூத் 25 ரன்களையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 16 ரன்களையும் சேர்க்க வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. யுஏஇ அணி தரப்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டுகளையும், மதியுல்லா கான் மற்றும் சகிர் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணிக்கு கேப்டன் முகமது வசீம் மற்றும் முகமது ஸொஹைப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது வசீம் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்த கையோடு முகமது ஸொஹைப்பும் தனது விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு அடுத்து களமிறங்கிய ராகுல் சோப்ராவும் 13 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் யுஏஇ அணி 73 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் ஜோடி சேர்ந்த அலிஷான் ஷராஃபு மற்றும் ஆசிஃப் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலிஷான் ஷராஃபு தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலிஷான் ஷராஃபு 68 ரன்களையும், ஆசிஃப் கான் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் யுஏஇ அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசச்த்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் யுஏஇ அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது.