பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - முலதான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் 13 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த உஸ்மான் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அசத்தினார். அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய இஃப்திகர் அஹ்மதும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை தொடர்ந்த உஸ்மான் கான் 56 பந்துகளில் தனது சதத்தைப்பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உஸ்மான் கான் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 106 ரன்களை குவித்தார். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டிம் செய்ஃபெர்ட், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் - சோயப் மாலிக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷான் மசூத் 36 ரன்களுக்கும், சோயப் மாலிக் 38 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய லூயிஸ் டூ ப்ளூய் 12, இர்ஃபான் கான் 27, ஹசன் அலி 17 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நவாஸ் 27 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய உஸ்மான் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News