விராட் கோலியை கட்டித்தழுவிய நவீன் உல் ஹக்; வைரலாகும் காணொளி!

Updated: Wed, Oct 11 2023 22:21 IST
விராட் கோலியை கட்டித்தழுவிய நவீன் உல் ஹக்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இது விராட் கோலியின் சொந்த மைதானம் என்பதால் இப்போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பும் இருந்தது.

அதற்கேற்ப ரசிகர்களும் விராட் கோலிக்கு உற்சாகத்தை கொடுத்துக் கொண்டே இருந்தனர். கேமரா மேனும் அடிக்கடி டெல்லியில் மைதானத்தில் விராட் கோலியின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக வைக்கப்பட்டிருக்கும் விராட் கோலி பெயர் வைக்கப்பட்டிருக்கும் பெவிலியன் பகுதியை அடிக்கடி காண்பித்துக் கொண்டே இருந்தனர். இதனால் வழக்கத்துக்கும் மாறாக கொஞ்சம் கூடுதலாகவே மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடி துருதுருவென இருந்தார் விராட் கோலி.  

குறிப்பாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் பேட்டிங்கிற்காக மைதானத்திற்கு வந்தபோது விராட் கோலி என்ற ரசிகர்களின் முழக்கம் விண்ணைப் பிளந்தது. இதில் முகம் மாறிப் போனார் நவீன் உல் ஹக்.  அவரால் இயல்பாக முதல் இரண்டு பந்துகள் விளையாடவே முடியவில்லை. அதன்பின்னர் ஒரு பந்தை நவீன் உல் ஹக் அடிக்க, அந்த பந்தும் ஸ்ரெய்டில் நின்று கொண்டிருந்த கோலியிடமே சென்றது. 

பின்னர் இந்திய அணியின் சேஸிங்கில் இஷான் கிஷன் அவுட்டானாதும் விராட் கோலி களம் புகுந்தார். அப்போது மைதானத்தை தொட்டு வணங்கி காலடி எடுத்து வைத்தார். சொந்த மைதானத்தில் விளையாடப்போகும் கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்பதால், அவர் இதனை செய்திருக்கக்கூடும். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி, ஐபில் முதல் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வந்த நவீன் உல் ஹக்கை கட்டித் தழுவி, அவருடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், விராட் கோலி என ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம் செய்து அவரை பாராட்டினர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கட்டித்தழுவிய காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை