விராட் கோலி கிரிக்கெட்டின் மாரபை மாற்றியமைத்துள்ளார் - பிரையன் லாரா!

Updated: Fri, Dec 01 2023 22:11 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்ட ஃபார்மில் இருந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

மேலும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங் துறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு போராடினார்கள். குறிப்பாக 765 ரன்களை விளாசி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக போராடியும் விராட் கோலி கோப்பையை வெல்ல முடியாமல் கண் கலங்கியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இருப்பினும் அவருடைய ஆட்டத்திற்கு பரிசாக இறுதியில் தொடர்நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் உலகக் கோப்பையை வெல்ல முடியாத நிலைமையில் அந்த விருதை வென்று என்ன பயன் என்பதே அனைவருடைய ரியாக்சனாக இருக்கிறது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையை வெல்லாததால் சிலர் விராட் கோலியின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவார்கள் என்று ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததால் விராட் கோலியின் செயல்பாடுகள் பெரிதல்ல என்று நிறைய பேர் சொல்வார்கள் என்பதை நான் அறிவேன். அணி விளையாட்டான கிரிக்கெட்டில் சேர்ந்து வெற்றி பெறுவது உங்களுடைய முதல் இலக்காக இருக்க வேண்டும். ஆனால் அணி வெற்றியை தொடர்ந்து தனிநபர் கிரிக்கெட் வீரர்களின் வெற்றியும் முக்கியமாகும். இதைத்தான் இந்த உலகக் கோப்பை முழுவதும் விராட் கோலி செய்து காட்டினார்” என்று பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை