டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் ஆர்சிபி அணியின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 26 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 12 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 19 ரன்களுக்கும் ஆட்டமிழ்ந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 56 ரன்களையும், ரஜத் படிதார் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விரட் கோலி சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் விராட் கோலி 12 ரன்களை எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 13500 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார். மேலும் இந்த அற்புதமான சாதனையைச் செய்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விராட் கோலி இதுவரை 413 டி20 போட்டிகளில் 396 இன்னிங்ஸ்களில் விளையாடி 9 சதம், 105 அரை சதங்களையும் அடித்து இந்த சாதனையைச் செய்துள்ளார்
ஒரு இந்தியராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
- விராட் கோலி - 413 போட்டிகளில் 13,500 ரன்கள்
- ரோஹித் சர்மா - 461 போட்டிகளில் 12,159 ரன்கள்
- ஷிகர் தவான் - 334 போட்டிகளில் 9797 ரன்கள்
உலகின் ஐந்தாவது வீரர்
இதுதவிர்த்து விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13,500 ரன்களை பூர்த்தி செய்ததன் மூலம் உலகில் இந்த மைல் கல்லை எட்டிய 5ஆவது வீரர் எனும் பெருமையும் பெற்றுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், கீரன் பொல்லார்ட், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் உள்ளிட்டோர் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்
- 14,572 - கிறிஸ் கெய்ல் (455 இன்னிங்ஸ்)
- 13,698 - அலெக்ஸ் ஹேல்ஸ் (492 இன்னிங்ஸ்)
- 13,571 - ஷோயப் மாலிக் (515 இன்னிங்ஸ்)
- 13,537 - கீரான் பொல்லார்ட் (617 இன்னிங்ஸ்)
- 13,500* - விராட் கோலி (396 இன்னிங்ஸ்)