அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் விராட் கோலி!

Updated: Mon, Nov 07 2022 15:48 IST
Virat Kohli Earns His Maiden ICC Player Of The Month Award For His T20 World Cup Exploits In October (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரர் வீராங்கனைகளைத் தேர்வு செய்து கடந்த ஆண்டு  முதல் ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி இன்று பரிந்துரைத்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, முதன்முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் இந்த விருதை முதல்முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் விராட் கோலி பெரும் 10 ஆவது ஐசிசி விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், மகளிர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக மகளிருக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்காக இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரும், பாகிஸ்தானின் நிதா தாரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இதில் பாகிஸ்தானின் நிதா தார் அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை