விராட் கோலி சச்சினை மிஞ்சிவிட்டார் - கிரேம் ஸ்மித்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2008இல் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணிக்கு சவாலை கொடுத்து வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படும் அவர் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார். மேலும் இதுவரை 48 சதங்கள் அடித்துள்ள அவர் விரைவில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49 சதங்கள்) சாதனையை நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அழுத்தமான சூழ்நிலைகளில் சேஸிங் செய்வதில் சச்சின் விட அதிக ரன்கள் மற்றும் சதங்களை அடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி சிறந்த சேஸ் மாஸ்டராக இருப்பதாக அனைவருமே பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை இப்போதே விராட் கோலி மிஞ்சியுள்ளதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலியின் கேரியர் அபாரமாக இருக்கிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய புள்ளிவிவரங்கள் வியப்பை ஏற்படுத்துகிறது. தம்முடைய சர்வதேச கேரியரில் ஆரம்பம் முதலே அவர் தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். என்னை பொறுத்த வரை அவர் சச்சினை மிஞ்சியுள்ளார். அதிலும் குறிப்பாக சேசிங் செய்யும் போது அவர் அபாரமாக செயல்படுகிறார். சேசிங்கை அவர் கட்டுப்படுத்தும் விதமும் சிறப்பாக இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுகிறார். அதே போல டாப் ஆர்டரில் அடுத்து வரும் வீரர்களுக்கு அழுத்தத்தை குறைக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா அசத்துகிறார். விராட் கோலியை பற்றி இப்படி பல விஷயங்கள் பேசப்படுகின்றன. எப்படியிருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய புள்ளிவிவரங்களும் சாதனைகளும் நம்ப முடியாததாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தம்முடைய பிறந்தநாளில் 49ஆவது சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.