IND vs ENG: கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; விராட் கோலி விலகல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கின்றன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதேசமயம் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பிடித்தாலும் அவர்கள் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டெஸ்ட் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் அகாஷ் தீப் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்களைத் தவிர்த்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சர்ஃப்ராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், ராஜத் பட்டிதார், துருவ் ஜுரெல் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அனுபவ வீரர் சட்டேஷ்வர் புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கேஎல் ராகுல்*, ரஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.