பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது அமீரின் முதல் ஓவரிலேயே முகமது ஹாரிஸ் மற்றும் கேப்டன் பாபர் பாபர் ஆசாம் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் அயுப்பும் ஒரு ரன் எடுத்த நிலையில் முகமது அமீரிடம் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹசீபுல்லா கான் - டாம் கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் சரிவிலிருந்து உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தில் ஹசீபுல்லா 28 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் கொஹ்லருடன் ஜோடி சேர்ந்த ரோவ்மன் பாவெல் தனது அதிரடியான ஆட்டத்தினால் எதிர்ணி பந்துவீச்சை பிரித்துமேய்ந்தார். தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்ட ரோவ்மன் பாவெல் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 34 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 64 ரன்களை குவித்த ரோவ்மன் பாவெலும் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஜமாலும் தனது பங்கிற்கு இரண்டு சிக்சர்களை பறக்கவிட, மறுமுனையிலிருந்த கொஹ்லர் காட்மோர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது . இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் கொஹ்லர் காட்மோர் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்திருந்தார். கராச்சி கிங்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது அமீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் ஆடம் ரோஸிங்டன் 15, தஹிர் 6, இர்ஃபான் கான் 4, ஷோயிப் மாலிக் ஒரு ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ வேட் அரைசத கடந்த கையோடு 53 ரன்னோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷதாப் கான் அதிரடியாக விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பெஷாவர் தரப்பில் ஒமர்ஸாய், அமெர் ஜமால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News