டிஎன்பிஎல் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சூர்யா ஆனந்த்- காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸின் சூர்யா ஆனந்த் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியில் பலச்சந்தர் அனிருத் 48 ரன்களையும், ஆதீக் உர் ரஹ்மான் 36 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாத்வ் 3 விக்கெட்டுகளையும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல் கிங்ஸ் அணி தரப்பில் கேப்டன் அருண் கார்த்திக் 67 ரன்களையும், இறுதிவரை போராடிய சோனு யதாவ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி 158 ரன்களில் ஆல் அவுட்டானது. பாந்தர்ஸ் தரப்பில் சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்முலம் மதுரை பாந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை சூர்யா ஆனந்த் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை சூர்யா வீசிய நிலையில், ஓவரின் முதல் பந்திலேயே 32 ரன்களைச் சேர்த்திருந்த சோனு யாதவின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் ஓவரின் மூன்றாவது பந்தில் வல்லிப்பன் யுதீஷ்வரனையும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் ஓவரின் 4ஆவது மற்றும் 5அவது பந்துகளில் சச்சின் ரதி மற்றும் இமானுவேல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இதன்மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக நெல்லை ராயல் கிங்ஸ் வீரர் சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் சூர்யா ஆனந்த் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.