நாங்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், பாபர் ஆசாம் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களையும் இறுதியில் அதிரடியாக விளையாடிய காம்ரன் குலாம் 25 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களையும் குவித்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் அறிமுக வீரர் குவேனா மபாகா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென் 97 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரீடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, “முதல் 25 ஓவர்களில் நாங்கள் விஷயங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தோம், ஆனால் கடைசி 25 ஓவர்களில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துவிட்டோம். அதனால் முதல் 25 ஓவர்கள் நாங்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாந்து. அதேசமயம் இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதளவில் உதவி கிடைக்கவில்லை. மெதுவான பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் பிடிப்பு இருந்தது. இருப்பினும் நாங்கள் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் எங்களுக்கு பழக்கப்பட்ட சூழ்நிலையில் எங்களால் இந்த எண்ணிக்கையை அடிக்க முடியவில்லை. அதனால் நாங்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் தொடக்கத்தை சிறப்பாக அமைப்பது மட்டுமே அணிக்கு பெரிய ஸ்கோரை எடுக்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.