அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியை வெல்வோம் - வாஷிங்டன் சுந்தர்!

Updated: Tue, Aug 06 2024 21:23 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 07) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனெவே இலங்கை அணி இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ள உத்வேகத்துடனும், அதேசமயம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனையில் இந்திய அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர், “வெளிப்படையாக கூற வேண்டும் எனில் பெரிய  தொடர்கள் வரவிருக்கும் நிலையில், நாங்கள் இதேபோன்ற சூழ்நிலைகளில் இருப்போம். மேலும் அந்த நெருக்கடியான சூழ்நிலைகளில் குறிப்பாக தரமான சுழல் தாக்குதலுக்கு எதிராக இதே போன்ற சூழ்நிலைகளில் வெற்றிபெற நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

இந்தத் தொடரில் இதுவரை நாங்கள் எதைச் செய்திருந்தாலும், அதை ஒரு கற்றலாக எடுத்துக்கொள்வோம். மேலும் எங்களுடைய அனைத்து முயற்சிகளையும் செய்து இப்போட்டியில் நாங்கள் முன்னேறுவோம். அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியை வெல்வோம். மேலும் எங்களிடமும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நாங்கள் எப்போதும் இதுபோன்ற விக்கெட்டுகளில் வெவ்வேறு வடிவங்களில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளோம்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட, இதுபோன்ற விக்கெட்டுகளில் நாங்கள் நிறைய போட்டியில் விளையாடுகிறோம். மேலும் எங்கள் அணியைச் சேர்ந்த பல வீரர்கள் மிடில் ஆர்டரில், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள் என்பது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் இப்போட்டியில் தங்களுக்கான வழியைக் கண்டுபிடிப்பதுடன், அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் இது போன்ற சூழ்நிலைகளில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு பேட்டிங் செய்வது என்பது குறித்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சுழற்பந்துக்கு எதிராக அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அதனால் எங்கள் அணுகுமுறையில் சிறிய மாற்றம் இருக்கும். எனவே நாளைய போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை