துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!

Updated: Thu, Aug 15 2024 15:33 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இத்தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளீட்டோரையும் பங்கேற்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் துலீப் கோப்பை உள்ளூர் தொடருக்கான அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இதில் டீம் ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், டீம் பி அணியின் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரும், டீம் சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டீம் டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்த அணிகளில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

அதேசமயம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் துலீப் கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு விலக்களிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அவர்களைத் தவிர மற்ற அனைவரும் விளையாடுகிறார்கள். அதை நீங்கள் பாராட்ட வேண்டும். புச்சி பாபு போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் மூத்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில்  சீனியர் வீரர்கள் காயமடைந்தால் அவர்களின் இடத்தை நிரப்புவது எளிதல்ல.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

நீங்கள் கவனித்திருந்தால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி வரும் வீரர்கள் யாரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். அதனால் நாமும் நமது வீரர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி கடந்த 2010ஆம் ஆண்டிலும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 2016ஆம் ஆண்டு தங்களது கடைசி துலீப் கோப்பை தொடரில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை