அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - கௌதம் கம்பீர்!

Updated: Tue, Oct 15 2024 09:18 IST
Image Source: Google

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி ஆக்ரோஷமான அனுகுமுறையுடன் விளையாடி வருகிறது. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் படுதோல்வியைத் தழுவியது. இதனால் கம்பீர் மீதான விமர்சனங்களும் எழுந்தது. 

ஆனால் அதன்பின் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெளிப்படுத்திய ஆட்டம் விமர்சனங்களுக்கு பதிலடியைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையிலும், இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது. மேலும் அப்போட்டியில் எண்ணிலடங்கா சாதனைகளையும் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த டி20 தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, மூன்றாவது டி20 போட்டியில் 297 ரன்களைக் குவித்து புதிய வரலாறு படைத்தது. அத்துடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன, வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தது. இதனால் கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு குறித்த பாராட்டுகளும் குவிந்தன.

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை (அக்டோபர் 16) பெங்களூருவில் தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பேட்ஸ்மேன்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை தடுக்க மாட்டேன் என கூறி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும், களத்தில் அவர்களுக்கு ஏற்றவாறு அழுத்தமின்றி விளையாட்டை விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை நாங்கள் ஏன் தடுக்க வேண்டும்? அவர்களது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு நாளில் 400-500 ரன்கள் ஏன் குவிக்கக் கூடாது? நாங்கள் இதுபோன்று அதிரடியாக விளையாடுவோம். அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக பலன்கள் இருக்கிறது.

இதுபோன்று அதிரடியாக விளையாடும்போது, ஏதேனும் ஒருமுறை 100 ரன்களில் ஆட்டமிழக்கும் வாய்ப்பும் இருக்கும். அதனை ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது வீரர்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். எந்த ஒரு சூழலிலும் இந்த முறையில் ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் செல்ல விரும்புகிறோம். இரண்டு நாள்களுக்கு முழுமையாக பேட் செய்யும் வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்.

அதனால், போட்டியில் வெல்வதே எங்களது முதன்மையான நோக்கம். போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற சூழலை இரண்டாவது அல்லது மூன்றாவது தேர்வாகவே நாங்கள் வைத்துள்ளோம். நாங்கள் எங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்புகிறோம். வேறு எந்த ஒரு புதிய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. நியூசிலாந்து மிக மிக சிறந்த அணி என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களிடம் உண்மையில் அதிக அளவில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வீரர்கள் நியூசிலாந்தில் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து போராடும் குணம் கொண்டவர்கள். அதனால், அவர்களுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. அவர்களது திறமையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நாங்கள் யாரைப் பார்த்தும் அச்சமடைய வேண்டியதில்லை. நியூசிலாந்தாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி ஒவ்வொரு போட்டியிலும் நாட்டுக்காக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை