ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின. அதேசமயம் குரூப் பி பிரிவில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. 

Advertisement

அந்தவகையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேனியல் வையட் மற்றும் மையா பௌச்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் டேனியல் வையட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை மையா பௌச்சரும் 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் கேப்டன் ஹீதர் நைட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீதர் நைட் 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அனாலும் இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அஃபி ஃபிளெட்சர் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், அவருடன் இணைந்து விளையாடி வந்த கியானா ஜோசப்பும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 52 ரன்களை எடுத்த நிலையில் கியானா ஜோசப் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அவரைத்தொடர்ந்து 50 ரன்களை எடுத்திருந்த ஹீலி மேத்யூஸும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டீன்ட்ரா டாட்டின் அதிரடியாக விளையாடி 27 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும் அணிடின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், நடப்பு சீசனின் அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. மேற்கொண்டு குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இங்கிலாந்து அணியானது லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News