WI vs BAN, 1st T20I: விண்டீஸுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!

Updated: Mon, Dec 16 2024 07:29 IST
Image Source: Google

வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய தன்ஸித் ஹசன் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து கேப்டன் லிட்டன் தாஸும் முதல் பந்திலேயும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் 8 ரன்களுடன் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சமீயா சர்க்கார் - ஜக்கார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவையான சமயத்தில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

மேலும் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் நிதானமாக விளையாடி வந்த ஜக்கார் அலி  27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌமியா சர்க்கார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த மஹெதி ஹசன் மற்றும் ஷமின் ஹொசைன் இணை அணியை கரைசேர்க்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமிம் ஹொசைன் 27 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மஹெதி ஹசன் 26 ரன்களிச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அகீல் ஹொசைன் மற்றும் ஒபேத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடவுள்ளது. 

 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை