மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வோல்வார்ட், ப்ரிட்ஸ் அசத்தல்; விண்டீஸை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஹீலி மேத்யூஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் ஸ்டெஃபானி டெய்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய டியாண்ட்ரா டோட்டின் 13 ரன்களுக்கும், காம்பெல் 17 ரன்களுக்கும், ஹென்றி ரன்கள் ஏதுமின்றியும், ஆலியா 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டேஃபானி டெய்லர் 44 ரன்களைச் சேர்த்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய ஸைதா ஜேம்ஸ் 15 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
ஒருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன், தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லாரா வோல்வார்ட் 59 ரன்களையும், தஸ்மின் பிரிட்ஸ் 57 ரன்களையும் சேர்த்தனர். மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோன்குலுலேகோ ம்லபா ஆட்டநாயகி விருதை வென்றார்.