இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - கிரண் நவ்கிரே ஆகியோர் தொடக்கம் கிடைத்தது. 

Advertisement

இதில் கிரண் நவ்கிரே 5 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த அலிசா ஹீலி - தீப்தி சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 29 ரன்கள் எடுத்த நிலையில் அலிசா ஹீலி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய தஹ்லியா மெக்ராத்தும் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ் 14 ரன்களிலும், ஸ்வேதா ஷெராவத் 4 ரன்களிலும், பூனம் கெம்னர் ஒரு ரன்னிலும், சோஃபி எக்லெஸ்டோன் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் யுபி வாரியர்ஸ் அணி 116 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தீப்தி சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த தீப்தி சர்மா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் டைடாஸ் சாது. ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஷஃபாலி வர்மா 15 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் 15 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மெக் லெனின் அரைசதம் கடந்து அசத்தியதுடன், அணியின் வெற்றியையும் எளிதாக்கினார். அதன்பின் 12 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெக் லெனிங் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் ஜெமிமா ரோட்ரிக்ஸ் - அனபெல் சதர்லேண்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்தனர். அதன்பின் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இதையடுத்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அனபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து தீப்தி சர்மா பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தீப்தி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் டெல்லி அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ராதா யாதவ் சிக்சரை விளாசி அணியின் பிரஷரை குறைத்தார். 

ஆனால் அதன்பின் ராதா யாதவ் 9 ரன்களிலும், ஜெஸ் ஜோனசன் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டைடாஸ் சாது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 19.5 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சத்தினார். 

இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அசத்திய யுபி வாரியர்ஸ் அணியின் தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News